மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக ஓட்டு போட்டது ஏன் தெரியுமா?
இதுதான் காரணம்.. ஓவைசி விளக்கம்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா (Women’s Reservation Bill)
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா (Women’s Reservation Bill) விற்கு எதிராக ஓட்டு போட்டது ஏன் தெரியுமா? இதுதான் காரணம்.. ஓவைசி விளக்கம்
டெல்லி: மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் நேற்று முன்தினம் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அசாதுதீன் ஓவைசி மற்றும் அவரது ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் மற்றொரு எம்பி என இருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கான விளக்கத்தை தற்போது அசாதுதீன் ஓவைசி கொடுத்திருக்கிறார்.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு நடத்தி வருகிறது.
கடந்த 18ம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தெடர் இன்றுடன் நிறைவடைகிறது. முன்னதாக இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவை பாஜக அரசு தாக்கல் செய்தது. இதனை ஆதரித்து 454 எம்பிக்கள் வாக்களித்தனர்.
அதேபோல எதிர்ப்பு தெரிவித்து அசாதுதீன் ஓவைசி மற்றும் அவரது ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் மற்றொரு எம்பி என இருவர் மட்டும் வாக்களித்தனர்.
இதனையடுத்து இந்த மசோதாவுக்கு தான் ஏன் எதிர்ப்பு தெரிவித்தேன் என்பது குறித்து ஓவைசி விளக்கமளித்துள்ளார். தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “தொகுதிகளை மறுசீரமைக்க எல்லை நிர்ணயம் செய்யப்படும் விவகாரத்தில் ஒட்டுமொத்த தென் இந்தியாவும் பாதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்த மசோதாவை எதிர்த்ததற்காக வரலாறு உங்களை எப்படி மதிப்பிடும்? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “தியனன்மென் சதுக்கத்தில் ஒரு தனி நபர் ஒட்டுமொத்த டாங்கிகளின் அணிவகுப்பை தடுத்தி நிறுத்தியதை நினைவுபடுத்தி பாருங்கள்.
அதேபோல 20 அல்லது 50 வருடங்களுக்கு பிறகு நாடாளுமன்ற விவாதங்களை மக்கள் படிக்கும்போது, நமது தலைவர்கள் ஏன் இந்த மசோதாவை எதிர்க்கவில்லை என்று சிந்திக்கக்கூடாது. ஓபிசி மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அதை வேறு எப்படி உங்களால் பதிவு செய்ய முடியும்?
எங்கள் எதிர்ப்பின் மையாக இதுதான் இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 25 முஸ்லிம் பெண்கள் மட்டுமே மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
சாமானிய பெண்களின் நிலை என்ன? பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு சமூகத்தில் அழுத்தம் இல்லை என்று உங்களுக்கு தோன்றவில்லையா? இந்த விவகாரத்தில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் இந்த சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு சீட் வழங்காததே இவர்களின் பிரதிநிதித்துவம் குறைந்ததற்கு காரணம்.
பெண்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் வழங்க சட்டம் கொண்டு வரும்போது, நாடாளுமன்றம்/சட்டமன்றத்தில் மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் உள்ள சமூகத்துக்கு அதை எப்படி மறுக்க முடியும்? மத அடிப்படையிலான இடஒதுக்கீடுகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் ஏதும் இல்லை என்பதால் ஓபிசி மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் உள்ளதா? இல்லை. அது உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இப்படியாக விவாதித்துக்கொண்டே நம்மால் போக முடியும். ஆனால் அது தற்போது அவசியமற்றது. எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்ற கோட்பாட்டில் அரசு செல்ல வேண்டும்.
சமத்துவ உரிமை இருக்க வேண்டும், சகோதரத்துவம் உருவாக வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இந்தக் கொள்கைகளின்படி அரசு செல்கிறது எனில், முஸ்லீம் மற்றும் ஓபிசி பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவது அரசின் கடமையாகும்.
இந்த மசோதாவை அமல்படுத்த முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்படும். இதில் தென்னிந்தியா கடுமையாக பாதிக்கப்படும்.
தென்னிந்தியா குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அதற்காக குறைவான தொகுதிகளை பெற வேண்டுமா?” என்று கேள்வியெழுப்பி விளக்கமளித்துள்ளார்.